தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தைக்கு 13-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வருகிற 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வருகிற 13-ஆம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை என கோயம்பேடு சிறு, மொத்த காய்கறி சங்கம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு சந்தை அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.இராஜசேகரன் கூறியதாவது: சென்னையில் வசிப்பவர்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடச் சொந்த மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், உணவு விடுதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சந்தைக்கு வரும் காய்கறிகள் விற்பனை பாதித்தால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக, சந்தைக்கு 13-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தை 14-ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்று கூறினார்.