தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கொல்கத்தாவில் இலட்சுமி, விநாயகர் சிலைகள் மற்றும் விளக்குகள் தயாரிக்கும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது.
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இன்னும் ஓரிரு தினங்களில் நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியின்போது தீப விளக்குகள் ஏற்றி மக்கள் வழிபாடு செய்வார்கள்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தகிந்தாரி (Dakhindari) பகுதியில், திறமையான கைவினைஞர்களால் சிலைகள் மற்றும் களிமண் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.
தற்போது விளக்குகள் மற்றும் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது. இங்கு செய்யப்படும் விளக்குகள் மற்ற இடங்களில் செய்யப்படும் விளக்குகளை விட வித்தியாசமாகவும், அழகாகவும் இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். தகிந்தாரி பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் மற்றும் விளக்குகள் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன. அனைத்து வகையான வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இங்குத் தயாரிக்கப்படும் சிலைகள் இந்தியா முழுவதும் மொத்த விற்பனைக்கு விற்கப்பட்டாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வால், தங்களின் இலாபம் குறைந்துள்ளதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.