தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்முவில் உள்ள சிறை கைதிகள், ‘ரோஷ்னி’ (Roshni) என்ற பெயரில் வண்ணமயமான மெழுகுவர்த்திகளைத் தயாரித்து வருகின்றனர்.
ஜம்மு அம்பல்லா (Amphalla) சிறையில் உள்ள கைதிகளுக்குத் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கி, கைதிகளைச் சீர்திருத்தும் பணியில், சிறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மேலும், சிறை கைதிகளை ஊக்குவிப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஜம்மு அம்பல்லா சிறையில் உள்ள கைதிகளுக்குப் பயிற்சி வழங்கி, மெழுகுவர்த்தி தயாரிக்க சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து, அழகான மெழுகுவர்த்திகள் தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கைதிகள் பல்வேறு வகையான வடிவங்களில், அழகான மெழுகுவர்த்திகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த மெழுகுவர்த்திகள் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த மெழுகுவர்த்தி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், கைதிகள் மற்றும் அவர்களை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கைதிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.