தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காஷ்மீரில் உள்ள முஸ்லீம் குடும்பம் களிமண் விளக்குகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, நாடு முழுவதும் வருகிற 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி தினத்தன்று தீமைகள் விலகி நன்மைகள் பெருகுவதற்காக, வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபாடு வழக்கம்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் களிமண் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், காஷ்மீரில் உள்ள முஸ்லீம் குயவர் குடும்பம் களிமண் விளக்குகளைத் தயாரிப்பதில் இரவு, பகலாக உழைத்து வருகிறது.
இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களிமண் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இங்குத் தயாரிக்கப்படும் களிமண் விளக்குகள் காஷ்மீர் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் விற்கப்படுகிறது. உமர் குமார் மற்றும் அவரது குடும்பம் பல தலைமுறைகளாக மட்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து உமர் கூறுகையில், இந்து, முஸ்லீம் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. நாங்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இந்த ஆண்டு நாங்கள் தயாரித்த விளக்குகள் உள்ளூர் மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
உமர் தனது பகுதியில் உள்ள இந்து குடும்பங்களுக்கு நூற்றுக்கணக்கான விளக்குகளை இலவசமாக வழங்கி உள்ளார்.