தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 200 பட்டாசு கடைகளுக்குத் தீயணைப்புத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே, பட்டாசு வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி காவல் துறை, உள்ளாட்சி மற்றும் தீயணைப்புத் துறைகளில் விண்ணப்பம் அளித்து இருந்தனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 200 பட்டாசு கடைகளுக்குத் தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால், அனுமதி இரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாகப் பிற மாவட்டங்களிலிருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.