மிசோராம் சட்டப்பேரவைத்தேர்தலில் 80.05 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் 76.26 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மிசோராம் சட்டப்பேரவயின் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜக, ஆளும் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 1,274 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுக்கு தொடங்கியது முதலே ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்நிலையில் மிசோராம் சட்டப்பேரவை தேர்தலில் 80.05 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல், சத்தீஸ்கரில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 76.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் உள்ள 7 மாவட்டங்கள் மற்றும் இதர 4 மாவட்டங்களில் அடங்கிய 20 பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 5,304 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. நக்ஸல் அச்சுறுத்தல் மிக்க மீதமுள்ள 10 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற்றது.
இந்தத் தோ்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நக்சல்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், 76.26 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.