தீபாவளி பண்டிகையொட்டி, உலக பிரசித்தி பெற்ற திருமலை – திருப்பதி திருக்கோவிலில், ஆஸ்தானம் என்றழைக்கப்படும் தர்பார் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை வரும் 12 -ம் தேதி நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்களும் பக்தர்களும் அருள்மிகு திருமலை – திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், திருமலை – திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், திருமலை – திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வரும் 12 -ஆம் தேதி தீபாவளி அன்று ஆஸ்தானம் என்று அழைக்கப்படும் தர்பார் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 -ம் தேதி காலை 7 மணிக்கு திருக்கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தர்பார் நடைபெறும்.
தர்பாரை முன்னிட்டு உற்சவர் மலைப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேததராக, திருக்கோவிலில் உள்ள தங்கவாசல் எதிரே உங்க கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
அப்போது, ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும் தர்பாரும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.