ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில உள்ளது.
இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நிலையில் நெதர்லாந்து அணி சாம்பியன் ட்ரோபிக்கு தகுதி பெற கடுமையாக போராடி வருகிறது.
இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தாலும், களத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர். நடப்பு சாம்பியன் என்பதை உணர்த்தும் விதமாக நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி செயல்படாதது, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறுமுனையில் நெதர்லாந்து அணிக்கு சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும், விளையாடும் அனைத்து போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்துகிறது. ஏதாவது ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காதது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகின்றனர். இதனால், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தரவும் வாய்ப்புள்ளது.
புனே மைதானத்தில் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில், முதலில் பந்துவீசிய அணிகளே மூன்றில் வெற்றி பெற்றுள்ளன. சராசரி முதல் இன்னிங்ஸ் 300+ ரன்கள் எடுக்கப்படுகின்றன.
மைதானத்தின் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 351 ரன்கள். டாஸ் வென்ற கேப்டன் மைதானத்தின் சாதனையை மனதில் வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே வாய்ப்புள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.