தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். இந்தச் சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமல்லாது சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இதனைத் திருச்சி, மதுரை, தேனி, சேலம், கடலூர், விழுப்புரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள். இங்கு வெள்ளாடு, செம்மறி, மலைக்கிராமங்களில் வளர்க்கப்படும் கொடி ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று ஆட்டுக்கறி விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் நேற்று சந்தைக்கு வந்தனர்.
தொடர்ந்து, சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் இரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 3 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை விற்பனையானது.
சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, ரூபாய் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகள் வர, வர வாங்கிச் சென்றனர். மொத்தமாக ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வாரச் சந்தை ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.