உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரமான அலிகாரின் பெயரை, ஹரிகர் என்று மாற்ற, மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க., அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலிகார் நகரின் பெயரை ஹரிகர் என மாற்ற அலிகார் மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யோகி அரசாங்கத்தின் கீழ், அலகாபாத் என்ற முந்தைய பெயரிலிருந்து பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றப்பட்டது. முந்தைய மாவட்டமான பைசாபாத் என்ற பெயர் அயோத்தி மாவட்டமாக மாற்றப்பட்டது. மேலும், தேவை என்றால் பிற ஊர்களின் பெயரும் மாற்றப்படும் என, முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அலிகார் மாநகராட்சியில் நேற்று, அந்த நகரின் பெயரை ஹரிகர் என மாற்றும் தீர்மானத்தை மேயர் பிரசாந்த் சிங்ஹால் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் ஆதரித்ததால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளனர். மாநில அரசு அதனை ஏற்றால், பின், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்படும். அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றலாம்.
இது பற்றி மேயர் பிரசாந்த் சிங்ஹால் கூறுகையில், ‘அலிகார் பெயரை ஹரிகர் என மாற்ற வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே இந்த நகருக்கு ஹரிகர் என்ற பெயர் தான் இருந்தது; புராணங்களிலும் இந்த பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் அலிகார் என மாற்றப்பட்டு விட்டது.
தற்போது பழம் பெருமையை மீட்டும் வகையில் மீண்டும் ஹரிகர் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.