குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே மழை விட்டுவிட்டு பெய்ந்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
காக்கா தோப்பு பகுதியில் வீடு இடிந்து சேதமானது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், திருமங்கலம், டி.குண்ணத்தூர், கல்லுப்பட்டி, பேரையூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது.
மழை காரணமாக, சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில், மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இதனிடையே, மதுரை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதனை ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.