குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 9 -ம் தேதி மற்றும் 10 -ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கோவை மாநகரான காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கிணற்றுக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.
லங்கா கார்னர் மேம்பாலம் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பாலம், வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம் அடியில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிட்டுள்ளது.
வடவள்ளி அடுத்த பி.என்.புத்தூர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. கனமழையால், மருதமலை ஐஓபிகாலணி செல்லும் முக்கியச் சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. உக்கடம் ஆற்றுப்பாலம் பகுதியில் தேங்கி நிற்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
8 மணி நேரத் தொடர் மழையால் கோவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.