கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறிப்பாக எஃகு தொழிலில் பயன்படுத்த உருவாக்கப்பட்டது.
2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. இதற்காக மும்பை ஐஐடி விஞ்ஞானிகள் புதுமையான வழிமுறைகளை உருவாக்குவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, டாக்டர். அர்னாப் தத்தா மற்றும் டாக்டர். விக்ரம் விஷால் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு மற்றும் தேசிய மையத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளனர்.
கார்பன் மோனாக்சைடு என்பது தொழில்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும். எஃகு தொழிலில், வெடிப்பு உலைகளில் இரும்புத் தாதுக்களை உலோக இரும்பாக மாற்றுவதற்கு இது ஒரு இன்றியமையாத மூலப்பொருள் ஆகும். கார்பன் டை ஆக்சைடை, கார்பன் மோனாக்சைடாக மாற்ற முடிந்தால், கார்பன் அளவு குறைவதுடன், தொடர்புடைய செலவுகளும் குறையும். இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும்.