ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். கிழக்கு மலைத் தொடரான சேர்வராயன் மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் குளுகுளு சீதோஷணமும் இதன் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது, தீபாவளி பண்டிகை என்பதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.
இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரியில் படகு சவாரி, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகைக் கோவில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
அதேபோல், ஏற்காட்டில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாபாரமும் படுஜோராக நடைபெறுவருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஏற்காட்டில், தற்போது, மாலையில் லேசான மழையும், அதிகாலையில் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதாவது, மழை மற்றும் குளிர் என ஒரு சேர நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.