2026ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்ஸி சேவையை இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவை ஆதரிக்கும் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் ஆகியவை தொடங்க உள்ளன.
இந்தியாவில் இவ்விரு நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகளைப் பெற்ற பின், முக்கிய நகரங்களில் ஏர் டாக்ஸிகளை இயக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ‘மிட்நைட்’ இ-விமானங்கள் நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட்டுடன் சுமார் 161 கிலோமீட்டர்கள் தூரம் பயணம் மேற்கொள்ளலாம். இந்தச் சேவை 200 ஏர் டாக்ஸிகளுடன் தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பறக்கும் டாக்ஸி மூலம், காரில் 60 முதல் 90 நிமிடங்கள் எடுக்கும் பயணத்தை, பறக்கும் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்களில் மேற்கொள்ளலாம் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சரக்கு, தளவாடங்கள், மருத்துவம், மற்றும் அவசரகால சேவைகளுக்கும் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, ஆறு மிட்நைட் ஏர் டாக்ஸிக்களை வழங்குவதற்காக ஜூலை மாதம் அமெரிக்க விமானப்படையுடன் ஆர்ச்சர் நிறுவனம் 142 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவை பெருநகரங்களில் உள்ள கடுமையான சாலைப் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாட்டுக்கு தீர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.