சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு அருகே அருள்மிகு வீரபத்ர சுவாமி கோவிலின் மாது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், பொது மக்கள் கூட்டம் பாரிமுனை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள அருள்மிகு வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
சத்தம் வந்த பக்கம் பொது மக்கள் ஓடிச் சென்று பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வரும் முன்னரே, பெட்ரோல் குண்டு வீசிய நபரை பொது மக்கள் பிடித்து வைத்திருந்தனர்.
அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவில் உள்ளே
வீசியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.