வெள்ளம் கரை புரண்டு ஓடும் ஆறுகளும், அடர்ந்த வனப்பகுதிகளும் கொண்ட அமேசானில் வறட்சி என்றால் நம்ப முடிகிறதா? அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து பார்ப்போம்.
தென் அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதி வரலாறுகாணாத வறட்சியைச் சந்தித்துள்ளது. அமேசான் நதியில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக, அதன் கிளை நதிகளிலும் நீர் குறைவடைந்துள்ளது. அமோசன் நதியின் இரண்டாவது பெரிய துணை நதியான நெகரோ ஆற்றின் நீர்மட்டம் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவாக குறைந்துள்ளது. இதனால், வரலாறு காணாத வறட்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகளாவிய வெப்பநிலை உயர்வாலும் பருவநிலை மாற்ற பிரச்னைகளாலும் இந்த வறட்சி உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், பிரேசிலில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால், பிரேசிலில் உள்ள ஆறுகளில் டால்பீன்கள் இறந்து வருகின்றன.
அமேசானில் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவரும் நிலையில், கிளை ஆறுகள் வற்றி உள்ளதால் உதவி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாசடைந்த நீரைப் பருகுவதால் மக்களுக்குச் சுகாதார ரீதியிலான பிரச்னைகளும் ஏற்பட தொடங்கியுள்ளது.
இனி வரும் காலங்களில் உலக வெப்பமயமாதலைத் தடுக்காவிட்டால், இதுபோன்ற பாதிப்புகளை உலகம் முழுவதும் எதிர் கொள்ள தயாராக வேண்டுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..