அயோத்தி இராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் இராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அயோத்தி இராமர் கோவில் குடமுழுக்கு விழா 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என இராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.
54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத்திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்படுகிறது.
ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும்.
புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகராஜ் ஆகியோர் லக்னோவில் உத்தரப்பிரதேச முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது இராமர் கோவில் குடமுழுக்கு (Pran Pratishtha) விழாவுக்கான அழைப்பிதழை அவர்கள் முதலமைச்சரிடம் வழங்கினர்.