காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏகாந்த சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43-வது திவ்ய தேசமாக காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் போற்றப்படுகிறது.
இத்தலம் விஷ்ணு காஞ்சி என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலும் சேர்த்து மும்மூர்த்தி வாசம் என்ற பெருமை பெற்றது.
காஞ்சியில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் சிற்ப வேலைப்பாடுகள், அழகிய தூண்கள் உள்ளிட்டவை இந்த கோவின் தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் 32 சன்னதிகள், 19 விமானங்கள், 389 தூண்களைக் கொண்ட மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால், வைகுண்ட பதவி நிச்சயம் என்பது ஐதீகம்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் காஞ்சி வரதராஜ பெருமாள், ஏகாந்த சேவையாக தங்க சப்பர வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.