தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஊட்டி மலை இரயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வரும் மலை இரயில் சேவை வருகிற 16-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3-ஆம் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை இரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை மலை இரயில் ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து பராமரிப்பு பணி முடிந்து கடந்த 8-ஆம் தேதி மீண்டும் மலை இரயில் இயக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னூர் மலை இரயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளன. மேலும், பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை இரயில் சேவை வருகிற 16-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் இரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.