உலகையே அச்சுறுத்திய சிக்குன்குனியா நோயைத் தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
சிக்குன்குனியா என்பது கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த நோயை “உலக சுகாதார அச்சுறுத்தல்” என்று கூறியுள்ளது.
Ixchiq என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, 18 வயது மற்றும் அதற்கு மேல், பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு செலுத்த அங்கீகரிக்கப்பட்டது என்று FDA (U.S. Food and Drug Administration) தெரிவித்துள்ளது.
அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரின் இந்த கிறீன் சிக்னல், வைரஸ் பாதிப்பு பரவலாக உள்ள நாடுகளில் தடுப்பூசியின் வெளியீட்டை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்குனியா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஒரு பகுதியின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் மிகவும் பரவலாக உள்ளது.