பி.எப் சந்தாரர்களுக்கு வட்டி தொகையை வரவு வைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
2022-23ஆம் நிதியாண்டுக்கு பிஎப் வட்டி விகிதம், 8.15 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும். இந்த தொகை வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பி.எப் சந்தாரர்களுக்கு வட்டி தொகையை வரவு வைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 24 கோடி கணக்குகளுக்கு வட்டித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் இறுதிக்குள் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வட்டித்தொகை செலுத்தப்படும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
வரவு வைக்கப்பட்ட பிறகு வட்டித்தொகை, தனிநபரின் பிஎஃப் கணக்கில் தோன்றும். வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை சரிபார்க்க பல வழிகள் உள்ளன:
எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், UMANG செயலி மற்றும் EPFO இணையதளம் வாயிலாக வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்.
விரைவில் அனைத்து பி.எப் சந்தாதாரர்களுக்கும் வட்டித் தொகை வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.