மதுராவின் கிருஷ்ணா ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு பட்டியலிட்டது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறிய நீதிமன்றம், இரு தரப்பினரையும் பதில் மனு தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டது.
முதற்கட்ட விசாரணையில், மதுராவின் கிருஷ்ணா ஜென்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளின் விவரங்களை தெரிவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
மே 26 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மதுராவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கிருஷ்ண ஜென்ம பூமி நில விவகார வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
லக்னோவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர், கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமான 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ண ஜென்மபூமியில் 1669-70 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்றுமாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.