கொலம்பியாவில் 200 டன் தங்கம், மரகதம், வெள்ளி உள்ளிட்ட 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சான் ஜோஸ் என்ற அந்தக் கப்பல் கடந்த ஆயிரத்து 708 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கடற்படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
அந்தக் கப்பலில் 200 டன் தங்கம், மரகதங்கள், வெள்ளி மற்றும் 11 மில்லியன் தங்க நாணயங்கள் அடங்கிய, பெரிய அளவிலான புதையல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
17-ஆம் நூற்றாண்டில் புதையலுடன் கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் கடந்த 2015-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.
இக்கப்பல் கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 அடிக்குக் கீழே உள்ளது. 2022-ஆம் ஆண்டு ஒரு குழு கப்பலின் அருகில் சென்று கப்பலில் இருந்த புதையலைப் புகைப்படம் எடுத்தது.
தற்போது, கப்பலில் உள்ள கோடிக்கணக்கான பொக்கிஷங்களை எடுக்க கொலம்பியா திட்டமிட்டுள்ளது. ஆனால், பல நாடுகள் இந்த பொக்கிஷம் தங்கள் நாட்டிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சான் ஜோஸ் கப்பலை 2026-ஆம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பிய அரசு திட்டமிட்டுள்ளது.