திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ராஜகோபுரத்தை, வெகு துாரத்தில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ராஜகோபுரம் எதிரே, ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றி விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 40 அடி வரையிலான உயரத்திற்கு, அடுக்குமாடி வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகம் முழுதும் கட்டி முடிக்கப்பட்டால், கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில் கட்டுமான பணிகளால் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் முறையிடப்பட்டது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் கடைகள் கட்டப்படுவதால் ராஜகோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என வாதிட்டார்.
ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். கடைகள் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.