சென்னை கிண்டியில் உள்ள மேதகு தமிழக ஆளுநர் மாளிகை மீது, பெட்ரேல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25 -ஆம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள மேதகு தமிழக ஆளுநர் மாளிகை மீது, சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பிரபல ரவுடி கருக்கா வினோத் மீது, காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கருக்கா வினோத் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றது தெரிய வந்தது.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில், தற்போது ரவுடி கருக்கா வினோத்தை குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். தற்போது, சென்னை புழல் சிறையில் ரவுடி கருக்கா வினோத் அடைக்கப்பட்டுள்ளார்.