தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வைகை அணை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. நேற்று நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வைகை ஆறு செல்லும் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் தேனி, மதுரை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நிரம்பி இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.
செல்லூர், ஆரப்பாளையம், யானைக்கல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் உட்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்துறை இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளைக் கொண்டு செல்லவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றங்கரைகளை ஒட்டிய பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.