தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குறைகள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு 149 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லவும், அவ்வாறு சென்றவர்கள் சென்னை திரும்பிவரவும் வசதியாக தமிழகம் முழுவதும் 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தலைநகர் சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இன்று முதல் 11-ம் தேதி வரை சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பய உள்ளது.
கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர்,சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
அதுபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, பெருங்களூரு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குறைகள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்க தமிழக போக்குவத்துறை சார்பில் 149 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அறிவித்துள்ளது. இதே போல, 1800 599 1500 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு தமிழக அதிகாரிகள் உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.