தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதன் காரணமாக காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.