லட்சுமி தேவி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவுக்கு தண்டனை வழங்குவதற்கான நேரம் வந்து விட்டது. அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்ரு ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா. இவர், தேவையில்லாத கருத்துக்களைக் கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த வகையில், ஏற்கெனவே பத்ரிநாத் கோவில் குறித்தும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து மகாசபாதான் காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து கடும் விமர்சனத்துக்குள்ளானார். இந்த சூழிலில், தற்போது லட்சுமி தேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சுவாமி பிரசாத் மௌரியா தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை வழிபடுவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து, லட்சுமி தேவியின் பிறப்பு குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். “எந்த மதம், ஜாதி, இனமாக இருந்தாலும் சரி, உலகிலுள்ள எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கேயும் குழந்தைகள் 2 கைகள், 2 கால்கள், 2 காதுகள், 2 கண்கள், 2 துளை கொண்ட மூக்கு, ஒரு பின்பகுதி, ஒரு தலை, ஒரு வயிறுடன்தான் பிறக்கின்றன.
இதுவரை 4 கைகள், 8 கைகள், 10 கைகள், 20 கைகள், 1,000 கைகள் கொண்ட குழந்தை பிறக்கவில்லை. அப்படி இருக்க, லட்சுமி தேவி மட்டும் எப்படி 4 கைகளுடன்பிறக்க முடியும்? மேலும், நீங்கள் கடவுள் லட்சுமி தேவியை வழிபட விரும்பினால், கடவுளுக்கு நிகரான உங்களது மனைவியை வழிபடுங்கள், அவருக்கு மரியாதை கொடுங்கள். ஏனெனில், வீட்டின் வளர்ச்சி, மகிழ்ச்சி, உணவு, குடும்பத்தை மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் பார்த்துக் கொள்வது உங்கள் மனைவிதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது கருத்துக்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.பி.சிங் கூறுகையில், “கட்சிக்குத் தீங்கு விளைவிக்கின்ற இதுபோன்ற கருத்துகளை நிறுத்துங்கள். மௌரியாவின் கருத்துக்கு கட்சி பொறுப்பேற்காது. இது அவருடைய தனிப்பட்ட பார்வை” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில்தான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “அவருடைய தண்டனைக்கான நேரம் வந்துவிட்டது. கடவுள்களும், பெண் தெய்வங்களும் மௌரியாவை விரைவில் தண்டிப்பார்கள். இதன் மூலம் தான் செய்த தவறை அவர் உணர்ந்து கொள்வார். மேலும், மௌரியா செல்லும் எல்லா இடங்களிலும் சனாதன தர்ம மக்கள் அவரை கண்டிக்க வேண்டும்” என்றார்.
மேலும், லட்சுமி தேவிக்கு 4 கைகள் இருப்பதற்கான காரணத்தை விளக்கிய தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், “லட்சுமி ராக்ஷஸ வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதால் 4 கைகளை கொண்டிருக்கிறார். சுவாமி பிரசாத் மௌரியா ஒரு செவிடன். நீங்கள் என்ன சொன்னாலும் அவனுக்கு புத்தி வராது. ஆனால் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான். அவன் ஒரு மூடன். இதற்கு மேல் அவனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.