ஹமாஸ் தீவிரவாதிகளுடனான போர் இறுதிவரை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 500 பேர் உட்பட சுமார் 11,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சி செய்து வருகின்றன. ஐ.நா. பொதுசபையில் கூட ஜோர்டான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், ஐ.நா. பொதுசபையின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. எங்களது மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை மறக்க மாட்டோம். போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அப்படி போர் நிறுத்தத்திற்கு நாங்கள் சம்மதித்தால், அது தீவிரவாதத்திடமும், தீவிரவாதிகளிடமும் நாங்கள் சரணடைந்தது போலாகிவிடும். எனவே, ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது கனவிலும் நடக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதன்படி, 1 மாதங்களைக் கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவத்தின் கராகல் பட்டாலியன் வீரர்களை சந்தித்துப் பேசிய நெதன்யாகு, “இது வெறும் ஆபரேஷன் அல்ல. போராளிக் குழுவால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சி. தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும். இதை நீங்கள் உணர்ந்து கொள்வது எனக்கு முக்கியம். இந்த உணர்வு வெறும் உதட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. இதயம் மற்றும் மனதிலிருந்து வரவேண்டும். நாம் அவர்களை முடிக்கவில்லை என்றால், அவர்கள் மீண்டும் வருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.