நவீன ஆடம்பர விருந்தோம்பலின் தந்தை என அழைக்கப்பட்ட ஓபராய் குழுமத் தலைவரான பிரித்விராஜ் சிங் ஓபராய் இன்று (நவம்.14) காலமானார். அவருக்கு வயது 94.
பிரித்விராஜ் சிங் ஓபராய் இந்தியாவில் ஹோட்டல் வணிக துறையில் முக்கிய பங்காற்றியவர். சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இவரின் பங்களிப்பை யாரும் அவ்வுளவு எளிதில் மறந்து விட முடியாது. இவரின் உழைப்பை, முக்கிய நகரங்களில் மாளிகைகளாக நிற்கும் அவரது ஹோட்டல்கள் சொல்லும்.
1929 இல் பிறந்த பிஆர்எஸ் ஓபராய், தி ஓபராய் குழுமத்தின் முதன்மை நிறுவனமான EIH லிமிடெட்டின் செயல் தலைவராக இருந்தார். அவரது ஆக்கப்பூர்வமான இயக்கம் இந்திய ஹோட்டல் துறையை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸின் ஸ்தாபகத்திற்கும் வழி வகுத்தது, ஓபராய் என்ற பெயர் மேல்தட்டு தங்குமிடங்களுக்கான ஒரு சொல்லாக மாற்றியது.
ஓபராய்க்கு 2008 இல் பத்ம விபூஷண் வழங்கப்பட்டது. 2012 இல் சர்வதேச சொகுசு பயண சந்தை என்ற அமைப்பு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது.
அவரின் இறுதிச்சடங்கு கபஷேரா பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக ஓபராய் நிறுவனம் தெரிவித்துள்ளது.