கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 26 பேர் மீட்கப்பட்டனர்.
கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து அப்பகுதியிலுள்ள மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயணைப்பு படையினர் கட்டடத்தின் ஜன்னலுக்கு அருகில் ஏணியை வைத்து மக்களை ஒவ்வொருவராக மீட்டனர். அடுக்குமாடிக் குடியிருப்பில் சிக்கி இருந்த குழந்தை உட்பட 26 பேரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது, “கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 26 பேரை மீட்டு தீயை அணைத்தனர் என்று கூறினார்.