இண்டி கூட்டணிக்கு கொள்கையோ தொலைநோக்குப் பார்வையோ கிடையாது. இதனால், மத்தியப் பிரதேசம் முதல் உத்தரப் பிரதேசம் வரை இண்டி கூட்டணிக்குள் ஒரே சண்டை நடந்து வருகிறது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா விமர்சனம் செய்திருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கின்றன. 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகளும் மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. அதேசமயம், தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி, மெகா கூட்டணியை அமைத்திருக்கின்றன. அக்கூட்டணிக்கு இண்டி கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இதனிடையே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலக் கட்சிகளைக் கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் கட்சி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறது. இதனால், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாநில கட்சியினர் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முதலில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார்தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை மோசடிக் கட்சி என்றார். இதேபோல பல்வேறு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன. இந்த சூழலில்தான், இண்டி கூட்டணிக்கு கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ கிடையாது என்று பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது.
இதுகுறித்து பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “டெல்லி மீண்டும் மாசு படிந்த காற்றுக் கூடாரமாக மாறியிருக்கிறது. பஞ்சாப்பில் மரக்கன்றுகள் எரிக்கப்படுவதே டெல்லியின் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என்று 2018-ம் ஆண்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அதேசமயம், தற்போது பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் பஞ்சாப்பில் சுமார் 2,600 மரக்கன்றுகள் எரிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு என்ன செய்தது? அதேபோல, டெல்லியில் மாசு ஏற்பட முக்கியக் காரணமாக விளங்கும் வாகனப் புகை மற்றும் தூசியை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தவிர, இப்போதெல்லாம் இண்டி கூட்டணிக்குள் என்ன நடக்கிறது? மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசம் வரை சண்டைதான் நடந்து வருகிறது. இந்த சண்டையால் புதிய அத்தியாயம் உருவாகலாம். இண்டி கூட்டணியினர் ஒருவரையொருவர் தாங்கள் செய்யும் தவறுகளை அம்பலப்படுத்துகிறார்கள்.
இண்டி கூட்டணிக்கு கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ கிடையாது. அகிலேஷ் யாதவ் சொன்னது சரிதான். ராகுல் ஜாதிவாரி கணக்கெடுப்பை எக்ஸ்ரே என்று அழைக்கிறார். பிறகு ஏன் ஜவஹர்லால் நேரு, இந்திரா மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் ஜாதிவாரி கணக்கெடுப்பை தடுத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.