கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு இந்தப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்றைய நாளிதழில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
அவர்களிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல், எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பம் கோரப்படுகிறது? கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடந்து அவர்களின் கண்காணிப்பில் தான் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். ஆனால், கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தாமல், அவசர அவசரமாக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோருகின்றனர்.
அரசுப் பணியிடங்களை நிரப்ப லஞ்சம் வாங்கியதால்தான் திமுகவின் ஒரு அமைச்சரே சிறையில் இருக்கிறார். மீண்டும் அதுபோல மிகப் பெரிய அளவில் முறைகேடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்து, அரசுப் பணிகளை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சிப்பதை, திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு இந்தப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.