திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பிரம்மோற்சவ சன்மானம் வழங்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய அறக்கட்டளை குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
கோவிலில் பணிபுரிபவர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், மாநில அரசு உத்தரவுப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடமலைப்பேட்டையில் ஊழியர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிராவல் சாலைகள் அமைக்க 25.67 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியில் கூடுதலாக 132 ஏக்கர் நிலத்தில் கிராவல் சாலைகள் அமைத்து ஊழியர்களுக்கு வீடு வழங்க 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரத்து 850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலைக்கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக வனவிலங்கு கண்காணிப்பு பிரிவு அமைக்க 3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கருணாகர ரெட்டி கூறினார்.