ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபரை சந்தித்து பேசுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நாடுகளிடையே வணிகம், முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான அமைப்பு அபெக் (APEC) – (ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டுறவு)
1989-ல் 12 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், சீனா-அமெரிக்க உச்சி மாநாடு மற்றும் 30வது அபெக் பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார். இந்த பயணத்தின் இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் சந்திப்பார் என கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்பை மீட்டெடுப்பது உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் மோதல்கள், காலநிலை மாற்றம் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்தல், தென் சீனக் கடல் மற்றும் தைவானைச் சுற்றியுள்ள இராணுவ விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சென்றுள்ள சீன அதிபரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.