5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால் பிணைக் கைதிகளை விடுவிப்பதாக, இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்தனர்.
இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 3,500 பேர் படுகாயமடைந்தனர். இதுதவிர, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இத்தாக்குதலில் 750-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 11,500 பாலஸ்தீனியர் உயிரிழந்திருப்பதாகவும், 28,000 பேருக்கும் மேல் படுகாயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இவர்களில் 6,500 பேர் குழந்தைகள் எனவும், 3 பேர் முதியவர்கள் எனவும் தெரிவித்திருக்கிறது. எனவே, உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இதனால், 40-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இத்தனை நாட்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கிய முகாம்களை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.
இதன் காரணமாக, நாளுக்கு நாள் இஸ்ரேலின் கை ஓங்கி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க கத்தார் நாட்டின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், 5 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால், பெண்கள், குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் ப்ரிகேட்ஸ் பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா, டெலிகிராம் மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “காஸாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அந்தப் போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும்.
மேலும், காஸா முனைப் பகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பளித்து விட்டோம். ஆனால், இஸ்ரேல்தான் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து முடிவெடுப்பதை தள்ளிப் போடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.