கனமழை காரணமாக விழுப்புரம் அருகே உள்ள மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக, பில்லூர் – சேர்ந்தனூர் இடையே மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் செல்வதால் பாலத்தை கடக்க நெடுஞ்சாலை துறையினர் தடை விதித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக, குச்சிபாளையம், அரசமங்கலம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 10 கி.மீ. தூரம் பொது மக்கள் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தஞ்சாவூரிலும் கனமழை பெய்து வருகிறது. அம்மாபேட்டை அருகில் புத்தூர் வருவாய் கிராம எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகமும் வருவாய்த் துறையும் வேளாண் துறை இணைந்து மாவட்டம் முழுவதும் உடனடியாக பயிர் பாதிப்பு சேத கணக்கெடுப்பினை துவங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.