கோவை மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்குள்ள யானைகள் அவ்வபோது உணவு தேடி வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக, மனித -விலங்கு மோதல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வனப் பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் வெளியேறிய 10 -க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ள தீத்திபாளையம் பகுதியில் உள்ள தோட்டங்களில் சரசரவென புகுந்தன.
அங்கு, அறுவடை செய்து வைத்திருந்த வாழை, தக்காளி ஆகியவற்றை தின்றும், காலில் போட்டு மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு நிற்காமல், அருகில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்து, அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு ரேஷன் கடையையையும் சூறையாடியுள்ளது.
வழக்கமாக தோட்டத்திற்குள் மட்டும் புகுந்து உணவுகளை வேட்டையாடி வரும் யானைகள் தற்போது ஊருக்குள்ளும் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதனால், பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். உயிருக்குப் பயந்து வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
ஏதாவது, அசம்பாவிதம் நிகழும் முன்னரே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.