தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ், கஜ்வேல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிவு பெற்று இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதில், 119 தொகுதிகளுக்கு மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 113 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல, தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியிலும், அவரை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.