காஸாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 3,500 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. வான்வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம் மும்முனைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் 11,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காஸா நகர சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசை வலியுறுத்துகிறேன். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, சமூகவலைதளம் வாயிலாக பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் சாட்சியங்கள் வந்து சேர்கின்றன. பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் கொல்லப்படுவதை உலகம் பார்க்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ட்ரூடோவின் இக்கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பொதுமக்களை குறிவைப்பதற்கு இஸ்ரேலை அல்ல ஹமாஸைத்தான் குற்றம்சாட்ட வேண்டும். அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து எங்களது மக்களின் தலையைத் துண்டித்தும், எரித்தும் படுகொலை செய்தனர். யூத இன அழிப்புகளிலேயே அண்மைக் காலத்தில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல் இது. இஸ்ரேல், பொதுமக்களை ஆபத்தில் இருந்து விலக்கிவைக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்கிறது. ஆனால், ஹமாஸ் அப்பாவிப் பொதுமக்களை ஆபத்தின் வழியில் நிறுத்துகிறது.
நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் காஸாவில் பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால், ஹமாஸ் துப்பாக்கி முனையில் அவர்களைத் தடுக்கிறது. இஸ்ரேல் அல்ல ஹமாஸ்தான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பாக்கப்பட வேண்டும். அவர்கள் இரட்டை போர்க்குற்றம் புரிந்து கொண்டிருக்கின்றனர். இச்சூழலில் பண்பட்ட நாடுகள் ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்தை தோற்கடிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைப் போலவே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் கருத்துக் கூறியிருந்தார். இதற்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்திருக்கிறார்.