தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதிகளில் ஒன்றாக விளங்கும் மயிலாடுதுறையில் கனமழையால், 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
டெல்டா மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்கா உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழையால், தரங்கம்பாடி, பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 4,00 விசைப்படகுகள் மற்றும் 5,000 ஆயிரம் பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் தண்ணீர் வராததால் விவசாயிகள் காலம் தாழ்ந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையினால் வடிகால் வசதி இன்றி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிய வழியின்றி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, அஞ்சாம்மனை கிராமத்தில் விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கனகராஜ் என்பவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.