உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் சுமார் 1,383 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி அதிகாலை அந்த சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியில் இருந்த சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகளுக்கு உதவ டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பப்பட்டன, அந்த விமானம் சுரங்கப்பாதையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்யாலிசூரில் தரையிறங்கியது.
முன்பு பயன்படுத்தப்பட்ட தோல்வியுற்ற உபகரணங்களுக்கு பதிலாக கனரக துளையிடும் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விரைவில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 40 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.