சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் திமுகவைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், செந்தில் பாலாஜியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறை மருத்துவமனை டாக்டர்கள் அவரைப் பரிசோதித்த பின்னர், காவல்துறை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வரும் 20 -ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.