அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில், டயர், பிரேக் லைனிங், ஸ்பிரிங் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் போதிய அளவில் இல்லாததால், 15 ஆண்டுகளைக் கடந்துள்ள, ஆயிரத்து 777 பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாகன அழிப்பு கொள்கையின்படி, 20 ஆண்டுகளுக்கு மேலான தனி நபர் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள வணிக வாகனங்களும் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, மாநில அரசுகளுக்குச் சொந்தமான, 15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகள், இதர வாகனங்களை, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின் இயக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடை விதித்தது. ஆனால், தமிழகத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட, 6 ஆயிரத்து 341 வாகனங்களை, அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டித்து இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில், ஆயிரத்து 777 அரசு பேருந்துகள் அடங்கும். இந்த பழைய பேருந்துகள் உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிமனைகளில் இந்த பழைய பேருந்துகளைச் சீரமைப்பதற்கு உதிரிப்பாகங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது, 15 ஆண்டுகளைக் கடந்துள்ள பேருந்துகளைப் பராமரித்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்குத் தேவையான, டயர், பிரேக் லைனிங், ஸ்பிரிங் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால், இந்த பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, எப்.சி., சான்று வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த பழைய பேருந்துகளை இயக்கி மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் செயலுக்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.