பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 குழந்தைகளுக்கு மேஜிக் செய்து வேடிக்கை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தன்னைச் சந்திக்க வரும் குழந்தைகளிடம் விளையாடி மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு குழந்தையுடன் பிரதமர் மோடி விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதேபோல, பள்ளிக் குழந்தைகளுடன் தனது இல்லத்தில் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது, குழந்தைகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கிக் கயிறு கட்டி மகிழ்ந்தனர். மேலும், ஒரு சிறுமி மோடிக்கு முத்தம் கொடுக்க, அதை குனிந்து ஏற்றுக் கொண்டார்.
இந்த சூழலில், தற்போது 2 குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மேஜிக் செய்து காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு சிறுவனும் சிறுமியும் பிரதமர் மோடியைச் சந்திக்கின்றனர். அப்போது, இருவரின் தலையையும் ஒன்றுடன் ஒன்று மோதச் செய்து பிரதமர் விளையாடுகிறார்.
தொடர்ந்து, ஒரு நாணயத்தை எடுத்து தனது நெற்றியில் ஒட்டவைத்து, அதை தனது பின் தலையில் தட்டி கீழே விழச் செய்கிறார். அதேபோல, அச்சிறுவன் மற்றும் சிறுமியின் நெற்றியிலும் நாணயத்தை ஒட்டவைப்பதுபோலவும், பின் தலையில் தட்டினால் அது விழாதது போலவும் மேஜிக் காட்டுகிறார்.
இந்த வீடியோவை, ‛குழந்தைகளுடன் குழந்தையாக மாறுகிறார் மோடி’ என்ற தலைப்பில் பா.ஜ.க. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. எனினும், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது, மோடியை சந்தித்தவர்கள் யார் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பாரதப் பிரதமர் மோடி, என் இளம் நண்பர்களுடன் சில மறக்க முடியாத தருணங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.