திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 16 நாட்களுக்குப் பின் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இங்குத் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து மணிமுத்தாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதை அடுத்து அக்டோபர் 31-ஆம் தேதி முதல் வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அருவியிலும் நீர்வரத்துக் குறைந்து சீரானது. இதைத் தொடர்ந்து, 16 நாட்களுக்குப் பின் வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கி உள்ளனர்.