முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மத்திய நீர்வள ஆணையத் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் விஜய் சரண் தலைமையிலான கண்காணிப்புக் குழுவிற்கு உதவியாகத் துணை கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது.
துணைக் குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் அனில்குமார், உதவிப் பொறியாளர் அருண் உறுப்பினர்களாக உள்ளனர்.
152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி 120 அடியாக இருந்தது. அப்போது இக்குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில், நேற்று நீர்மட்டம் 131.30 அடியாக இருந்த நிலையில், அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக பிரதான அணை, பேபி அணை, ஷட்டர் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது. அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் இதுவரை நடந்த பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 2,4,5 ஆகிய மூன்று ஷட்டர்களை அதிகாரிகள் இயக்கிப் பார்த்தனர். அணைப்பகுதியில் பொருத்தப்பட்ட நிலநடுக்கக் கருவி, நிலஅதிர்வுக் கருவி ஆகியவற்றைப் பார்வையிட்டு அதன் இயக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.
மாலையில் குமுளி 1-ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஆய்வு தொடர்பான அறிக்கையை விஜய் சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவினருக்கு இக்குழு அனுப்பி வைக்கும்.