உலகம் முழுவதுமுள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக இந்து மாநாடு வரும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், மாதா அமிர்தானந்தமயி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளரும், மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவருமான சுவாமி விஞ்ஞானானந்தா கூறுகையில், “உலகம் முழுவதும் உள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் ‘உலக இந்து மாநாடு 2023’ வரும் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
‘ஜெயஸ்ய ஆயத்னம் தர்மா’ (தர்மம், வெற்றியின் உறைவிடம்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை எதிர்கொள்ளவும், சாதனைகளை கொண்டாடவும், செழுமை, நீதி, அமைதிக்கான பொதுவான லட்சியத்தை சாதிக்கவும் வழிசெய்கிறது.
மாநாட்டில், உலக இந்து பொருளாதார மன்றம், இந்து கல்வி மாநாடு, இந்து ஊடக மாநாடு, இந்து அரசியல் மாநாடு, இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து அமைப்புகள் மாநாடு உட்பட 7 விதமான தலைப்புகளில், இணை மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.
60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாடு, இந்து சமூகத்தின் முன்பு இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயவும், விவாதிக்கவும் ஒரு விரிவான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும், இந்து ஊடக மாநாடு, விவாதப் பொருட்களை வடிவமைப்பதில் ஊடகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
செய்தி ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் போலி விவாதப் பொருட்களை எதிர்கொள்ளுதல், பேச்சு சுதந்திர பிரச்சனைகள், சினிமாவை மறு கட்டமைப்பு செய்து மீட்டெடுத்தல், பொழுதுபோக்குத் துறையில் உள்ள இந்துக்களுக்கு எதிரான வெறுப்புநிலையை எதிர்கொள்ளுதல், தீவிர இடதுசாரித்தனத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும்.
இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து மறுமலர்ச்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆக்கப்பூர்வ பங்களிப்புகளை அங்கீகரிக்கும். இந்துக் கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். பிற மதத்தினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருக்கும் கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.
உலகம் முழுவதும், இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். உலகளாவிய இந்துக்களிடம் பொதுவான பார்வை மற்றும் லட்சியத்தை உருவாக்குவதே மாநாட்டின் சாராம்சம். மாநாடு, ஒரு மகத்தான பயணத்தின் தொடர்ச்சி. இது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் ஒற்றுமையை பறைசாற்ற இருக்கிறது.
மேலும், இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், மாதா அமிர்தானந்தமயி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
மேலும், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, விஞ்ஞானியும் எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றுகிறார்கள்.
தவிர, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர் மற்றும் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஏ ஷா, பாரதத்தின் மிகப்பெரிய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களும் ஸ்கன்ரே டெக்னாலஜி நிறுவனர்களுமான விஸ்வபிரசாத் ஆல்வா, ஸ்டான்போர்ட் உள்ளிட்ட வல்லுநர்களின் பேச்சுக்கள் இடம்பெறும்.
அதேபோல, பல்கலைக்கழக பேராசிரியர் அனுராக் மைரல், நேபாள கோடீஸ்வரர் உபேந்திரா மஹதோ, பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ஃபகர் ஷிவா கச்சி உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்” என்றார்.
மாநாடு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சுஷீல் சரஃப் கூறுகையில், “இந்து சமூகம் விவாதங்களில் ஈடுபடுவதற்கும், தங்களின் மதிப்புகள், படைப்பாற்றல் மற்றும் திறமைகளை முன்னிலைப்படுத்துவதற்கும் இந்து உலக மாநாடு ஒரு நிலையான உலகளாவிய தளமாக செயல்படுகிறது” என்றார்.